பேராசிரியர் பசுபதி 1999 டிசம்பரில் வெண்பா வடிக்கலாம் வா திரியில் மன்றமையத்தில்
வில்லியம் ப்ளேக்கின் பாடலை இட்டு வெண்பா வடிவம் கேட்டார். அப்போது வெளிவந்தவை:
I am angry at my friend
I told my wrath
My wrath did end
I am angry at my foe
I told it not
My wrath did grow
---William Blake
நண்பரிடஞ் சீற்றம் நவின்ற வுடன்தணியும்
வன்பகைமேல் மற்குத்தீ வாய்மூட லால்வளரும்;
நண்புபகை நம்மனத்து நாடகங்கள் என்பதனால்
தண்மையே சான்றோரின் சால்பு
--- பசுபதி, டொராண்டோ
என்னுள் ளெரிசினம் நண்பர்க் கியானெடுத்துச்
சொன்ன வுடன்தணிந் தேகிடும் -- அன்றியான்
வன்பகைமேற் சாடேனில் வன்மம் வளர்ந்தோங்கி
என்னையே வாட்டு மெரித்து
--- அனந்தநாராயணன், மக்மாஸ்டர்
பொங்கிவரும் வெஞ்சினமும் போக்கொழியும் நண்பரிடஞ்
சிங்கமெனச் சீறிட்ட வக்கணமே --- தங்கியுள்ளே
வாட்டிடுமாம் வன்பகைவர் மேற்காட்டா துட்புகைந்து
கூட்டைக் கொளுத்திடுந் தீ
---- வாஞ்சிநாதன்
இது போன்ற மொழிபெயர்ப்புகளைப் பலரின் கைவண்ணத்தில் வந்ததை, நான் இடுவதன் நோக்கம் எத்தனை சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை உணர வைப்பதுதான். இது வெண்பா இயற்றப் பயில்வோருக்கும், ஆரம்பநிலையில் இருப்போருக்கும், முயன்றால் எழுதலாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புவதால்தான் இடுகிறேன். அதோடு வேறுசிலர் இதெல்லாம் அந்தக் காலத்தில் எழுதிப் பயன்படுத்திய வடிவம் இந்த காலத்திற்குச் சரிப்பட்டு வராது என்று சுருங்கிக் கொள்கிறார்கள். அதுவும் சரியல்ல என்று நினைக்கிறேன். பழைய காலச் செய்யுள்களைப் படிப்பது படிவங்களை மனதில் வாங்கிக் கொள்ளவும், இக்காலத்தில் இயற்றப்படுகின்றவற்றைப் படிப்பது ஒரு ஊக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
Tuesday, September 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஆக்கம் தருவதெல்லாம் ஆன்றோர் தனதளவில்
ஊக்கம் அளிக்கவே உணர்வுக்கு(ம்) - தாக்கம்
பதிவின் மறுமொழி வெண்பாவில்; பார்த்தேன்
பதிவில் இலையே தலைப்பு
தங்கள் முயற்சி எங்களை ஊக்குவிப்பதொன்றே என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்டுள்ளோம்.
தலைப்பிடவில்லை எனபதை சொல்லிச் செல்ல வந்தேன். நல்ல வெண்பாவுடன் பின்னர் வருகிறேன்.
@முகவை மைந்தன்:
ஒரு சப்பைக் கட்டு:
தலைபோகுங் காரியத்தில் மூழ்கிய தால்தான்
தலைப்பின்றி யிட்ட தவறு
உங்கள் ஊக்கத்தில் நண்பர்கள் இங்கே இடுகின்ற பாக்களின் தரம் மென்மேலும் மெருகேறி உயர உயர, நம்மாலும் எழுதமுடியும் என்கிற நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்கிறது... :-)
பேச்சையே பாவாய் மணம்கமழ விட்டார்
போச்சேயென் நம்பிக்கை தான்
பகையதனை சொல்லாமல் மென்னெஞ்சு வீணாய்
புகையதனை மண்டிடுமே வன்தீயால்- ஆறுமே
புண்பட்ட நெஞ்சமே நட்பினால் கூறிட்ட
பண்பட்ட உள்ளமே தான்.
I am angry at my friend
I told my wrath
My wrath did end
I am angry at my foe
I told it not
My wrath did grow
---William Blake
நண்பரிடம் கோபத்தை நான்கொண்ட போதில்
வன்மொழி பேசி வழக்கினைத் தீர்த்தேன்
பகைவரிடம் கோபத்தை பேசவும் இல்லை
பகையும் வளருது பார்.
(நேரடியாய்ப் பொருளை குறிவைத்து எழுதியது)
பிறகு வருகிறேன்:_))
//நண்பரிடம் கோபத்தை நான்கொண்ட போதில்
வன்மொழி பேசி வழக்கினைத் தீர்த்தேன்
பகைவரிடம் கோபத்தை பேசவும் இல்லை
பகையும் வளருது பார்.//
திருத்தம்::
நண்பரிடம் கோபத்தை நான்கொண்ட போதினில்
வன்மொழி பேசி வழக்கினைத் தீர்த்தேன்
பகைவரிடம் கோபத்தைப் பேசவு மில்லை
பகையும் வளருது பார்.
பகையிடம் கோபத்தைச் சொல்லா திருக்கப்
புகையாய்க் கனன்றிடும் நெஞ்சு - சிகையில்
நெருப்பா யெரித்திடு முள்ளத்தீ யாற்றும்
உறவோ டுளம்திறந் தால்
@இப்னு ஹம்துன்: "வழக்கினைத் தீர்த்தேன்" என்பது கருத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
@சத்யா: மண்டிடும் என்ற சொல் புகை செறிந்து சூழ்வதை அழகாகக் குறிப்பிடுகிறது.
ஈற்றடியைப் "பண்பட்ட சொல்லின் பாங்கு" என்று முடித்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று தோன்றுகிறது.
(இது மோனைக்காகப் பகரத்தில் தொடங்கும் சொல்லைத் தேடும்போது கிடைத்தது. எனவே இலக்கணத்துக்காகச் சொல் தேடும் போதுகூட நல்ல சொல் குதிரலாம்!)
@அவனடிமை: பிறர் தரம் உயரே சென்றால் "வெள்ளத் தனைய மலர்நீட்டம்" என்பதை நினைவிற் கொள்ளலாமே!
பேச்சோடு நல்கருத்தைப் பின்னிடுவீர் உம்பாவின்
வீச்சும் விரிந்திடுங் காண்
பெருஞ்சினம் கொண்டேன்; பொரிந்த தருணம்
பொருந்து(ம்) கெழியது அல்லால் கருவினன்
மற்றோர் இடத்து முரணால்; வளர்ந்தது
பற்றுடன் பகையின் னிலத்து
மனதால் கருவுவதால் சொல்வதில்லை. 2வது அடியில் மோனை அமையவில்லை
கெழி - கெழு - நட்பு
அறிந்த புது சொல் இகுளை - தோழி எனும் பெண்பால் சொல். பலர்பால் கருதி பயன் படுத்தவில்லை.
@அவனடிமை: உங்கள் பா இப்போது நல்ல ஓட்டத்தோடு வந்திருக்கிறது.
@முகவை மைந்தன்: சங்ககாலச் சொற்கள் மட்டுமல்ல, சொற்கோவையும் சங்ககாலத்தை நினைவூட்டுகிறது! நன்று!
ஆனால் கருவுவது என்ற சொல் பற்றி எனக்குத் தெரியவில்லை.
தாங்கலைத் தாங்குவர் கேளிர் வதங்குவர்
தாங்கலை தாங்கி யவர்
மனத் தாங்கலை வெளிப்படுத்தும் போது (வெறுப்பு மடிவதால்) அதை ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்ட இயலும். அவ்வாறின்றி தன் மனதினுள்ளேயே தாங்குபவர் (வெறுப்பு வளர்வதால்) அன்பு குன்றி வாடுவர்.
சிறு வயதில் இருந்து 'கருவிட்டான்' என்ற சொல்லை கேட்டு வருகிறேன். அழிக்க உறுதி எடுப்பதையே குறிப்பதாக உணர்கிறேன். கருவறுக்க போன்ற கடுஞ்சொற்கள் மருவி இருக்கலாம்.
மேலும் மனதில் பழி உணர்ச்சி ஏற்படுவதை குறிக்கவும் உணர்த்தலாம். தங்கள் ஐயம் தீர்க்க சொற்களஞ்சியங்களிலும் தேடினேன். ஒன்றில் கூட இச்சொல்லை காண இயலவில்லை. எனக்கே இப்ப சங்கையாத் (அச்சத்துடன் ஐயம்) தான் இருக்கு.
வேறு யாராவது இச்சொல்லை அறிந்திருந்தால் சான்று கூறி என்னைத் தப்புவியுங்கள்.
கருப்புக் கறுத்தும் கருத்து(ம்) கறுக்கா
கருவை கறுவினன் உணர்ந்து.
கருப்பு, கறுப்பு என்றாலும் கருத்து மாறாது. ஆனால் கருத்தை கறுத்து என உரைக்க முடியாது. அது போல கறுவு என்பதற்கு பதில் கருவு என தவறாக தந்தமைக்கு என்னை நானே கறுவினேன்.
சினத்தைத் தணிக்கவே சீறிடும் நண்பர்
மனதினில் நேசமும் மங்கா- அனலாகி
வீசும் பகையும் வளரும் வெறுப்பெலாம்
பேசாத கோபப் பொழுது!
//வாஞ்சிநாதன் said...
@அவனடிமை: ..............ஆனால் கருவுவது என்ற சொல் பற்றி எனக்குத் தெரியவில்லை.//
//முகவை மைந்தன் said...
வேறு யாராவது இச்சொல்லை அறிந்திருந்தால் சான்று கூறி என்னைத் தப்புவியுங்கள்.///
அன்புடையீர்,
அது கருவுதல் இல்லை. கறுவுதல்.
கறுவு என்பது Be angry, displeased or furious, (அ) entertain malice or hatred என்ற பொருளிலாம்.
நான்கு நாட்களாக இணையத்தை எட்டவே முடியாமற்போனது.
இப்னு ஹம்துன், இப்பொது இன்னமும் அழகான பாடலுடன் வந்திருக்கிறீர்கள்.
அம்மம் "கறுவுதல்" என்ற சொல் கோபத்தில் குமுறுவதைகப் பற்றிப் பயன்படுத்தலைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவாதம்
மறந்து போன சொல்லையும் அதன் சரியான் பொருளையும் உணர்த்தியுள்லதால் எனக்குப் பயன்பட்டுள்ளது.
முகவை மைந்தருக்கு நன்றி.
வெண்பாவை எழுத வைக்க அருமையான முயற்சி... நான் ஒரு வெண்பா எழுத முயற்சி செய்து இருக்கிறேன்...பிழை இருக்கிறதா என்று சொல்ல முடியுமா?
ஆசை அறுத்தால் தெளிவு பிறக்குமாம்
ஆடை துறந்த முனிவரும் பாடினார்
ஆசை மறந்தவர் புத்தனும் சாடினன்
ஆயினும் வாடுவார் காண்
நேரம் ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி..
தொடருட்டும் உங்கள் நற்பணி
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
Post a Comment