izmanam.com -->

Monday, July 28, 2008

அறிமுகம்!

அன்பன்என் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
தென்னவன்நான் செந்தமிழின் சீரெடுத்தே -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!

என்னைப்பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும். என் வெண்பா எழுதலாம் வாங்க வலைப்பக்கத்தைப் பார்வையிட்ட நண்பர் ஜீவா அவர்கள், "அப்பணியை இயன்றவரை இனிய தமிழிலும் எங்களோடு இணைந்து செய்யமுடியுமா?" என வினவினார். "இயன்றவரை இனியதமிழ் இடையில் செயல்படாமல் நின்றுபோனதால்தான் நான் என்வலையில் அப்பணியைச் செய்யத்துவங்கினேன். மீண்டும் இனியதமிழ் செயல்படுமானால் மகிழ்ச்சியே! இனியதமிழ் இயங்க என்னாலான பங்களிப்பைச் செய்யக் காத்திருக்கிறேன்" என்றேன்.

நண்பரின் அழைப்பை ஏற்று இங்கும் ஈற்றடிகளை வழங்கவிருக்கிறேன். பொதுவாக வாரத்திற்கோர் ஈற்றடியென அறிவன்தோறும் (புதன்) இடுகைகளைத் தரமுயல்கிறேன். முன்புபோல் நண்பர்கள் ஆதரவை நல்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்வலையான வெண்பா எழுதலாம் வாங்க வலையிலும் திங்கள் தோறும் ஈற்றடி வழங்கி வெண்பா விளையாட்டைத் தொடர்ந்து நடத்திவருகிறேன். அங்கும் நண்பர்கள் அனைவரையும் பங்குபெற அழைக்கிறேன்.

அழைத்திட்டார் ஜீவா அழைப்புத் தனையேற்(று)
இழைத்தேன் இடுகைதனை இங்கு! -விழைந்தே
வழங்கீற் றடிக்கு வரைந்திடுவீர் வெண்பா
இயங்கும் இனியதமி ழில்!

இயன்றவரை இங்கு இனியதமிழ் செய்ய
முயன்றுவரும் முன்னோர்* முறையே -நயந்திவனும்
நற்றமிழில் பாப்புனைய நண்பர் குழாந்தனைப்
பொற்போ டழைக்கின்றேன் பூத்து!

முன்னோர்* -எனக்குமுன் இங்கு இடுகை செய்துவருபவர்கள்.

இவ்வாரத்திற்கான ஈற்றடி:- இனிய தமிழ்செய்வீர் ஈங்கு!

அகரம்.அமுதா

18 comments:

said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் :)

said...

வாழ்த்து(க்)கள்!!

said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் :)

said...

பிழையின்றித் தமிழில்நற் பாக்களாய் - வழுவா
மழையென வெண்பா மடமடவென் றெழுத
அழைத்தேன் அகமும் மகிழ்ந்து

**
ஈற்றடிக்கான என் வெண்பா
**


கடிதமிழில் நித்தம் கதைப்பதுவும் போச்சு
வெடிநடுவில் வாழும் நிலையில் - கடியாய்
பணிதான் நிதமுண் டெனினும் சுவைக்காய்
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு

**


தவறெனில் தளை(லை)யில் தட்டிச் சொல்லவும் :))

said...

நாட்டிற்கோர் 'நல்லவன்' நண்பராம் 'ஆயில்யன்'
ஊட்டக் கவிசெய்யும் ஒப்பில்'ஜீவ்ஸ்' -பாட்டில்
கனித்தமிழ்செய் 'தீச(ன்)'இவர்க் கன்புவணக் கங்கள்;
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு!

said...

நல்லது, வாழ்த்துக்கள்.

said...

நாட்டிற்கோர் 'நல்லவன்' நண்பராம் 'ஆயில்யன்'
ஊட்டக் கவிசெய்யும் ஒப்பில்'ஜீவ்ஸ்' -பாட்டில்
கனித்தமிழ்செய் 'தீச(ன்)'இவர்க் கன்புவணக் கங்கள்;
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு!

said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் :)

said...

தனியாத வேட்கை மலர்மலர மக்கள்
மணியான நாட்டு நலச்செய்தி எல்லாம்
கனிவோடு கேட்டிருக்க நாளும் மறவாது
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு

said...

வணக்கம் ஜீவா சுமதி மங்களுர்சிவா வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றிகலந்த வாழ்த்துகள்.

செல்வி ஷங்கர் அழகிய வெண்பா புனைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

Anonymous said...

தமிழை எப்படிங்க செய்யறது ?

said...

வணக்கம் உயர்திரு Anonymous அவர்களே!

நன்னூலார் வினாக்கள் ஆறுவகை என்கிறார். அவ்வாறு வகையிலும் பொருந்தாக வினா தங்களுடையது.

இனிய தமிழ்செய்வீர் இங்கு என்பதன் பொருள் விளங்காமல் வினாதொடத்தீரா? அல்லது வினா எழுப்ப வேண்டும் என்பதற்காக எழுப்பினீரா? என்று எனக்குத் தெரியவில்லை.

ஆயினும் தங்களுக்குத் தக்க சான்றுகளுடன் விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

திருமூலரைத் தெரியுமா உமக்கு?

என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ்செய்யு மாறே -என்றெழுதினார்.

இங்கே தமிழ் செய்தல் என்றால் தமிழைச் செய்வீர் என்றா பொருள்கொள்வது? தன் இசையை நன்றாகத் தமிழில் செய்யுமாறே என்றல்லவா பொருள்கொள்கிறோம்.

அதுபோலத்தான்:-

நாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? கவிதை செய்துகொண்டிருக்கிறோம். செய்யும் கவிதையில் தமிழ்ச்சொற்களைப் பெய்து கவிதை செய்யுங்கள் என்பதே அதன் உட்பொருள்.

முதலில் வினா எழுப்புவதற்குமுன் நன்கு ஆய்ந்து பிறகு வினா எழுப்பவும். வாழ்த்துகள்.

said...

துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு
;
தணிந்திடும் தாகம்; பருகிட இன்பம்;
அணிந்திட ஆக்கம்; ஆகவே நாளும்

இனிய தமிழ்செய்வீர் ஈங்கு.

said...

அழகிய வெண்பா செய்தளித்தீர் ஜீவா அவர்களே! வாழ்த்துகள்.

செய்திடு வெண்பா திறம்பட நண்பா
பெய்திடு தமிழைப் பெரிதாக! -கைவிடு
வேற்று மொழிச்சொல் வேரறுத் திங்கே
இனியதமிழ் செய்வாய் இனி!

said...

இயன்றவரை கிட்டுமே இன்தமிழும் இங்கு
வியப்பளிக்கும் நற்புலவர் வெண்பா- இயல்பாய்
அகரம் அமுதனின் அன்பின் வருகை
மிகவும் தருமே மகிழ்வு.

said...

நற்றமிழ் செய்தே நமக்கின்பம் காண்பதற்கு
மற்றோரா வேண்டும் மொழிந்திடுக - சொற்கள்
அணியாய் பொழியும் அழகும் விளங்க
இனிய தமிழ்செய்வோம் இங்கு!

said...

வாழ்த்துக்கள் அகரம் அமுதா.
தேன் தமிழ் வெண்பா மிக‌ அருமை.

said...

இப்னு! அழகிய வெண்பாக்களைப் பொழிந்துள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி நண்பர் பால்ராஜ் அவர்களே!