முதலிரு சீரிணை முதலிருந் திரண்டிடை
இடையீடு பொழிப்பொரூஉ ஈறிலி கூழை
முதலீ றழலில மேல்கீழ்க் கெதுவாய்
முழுவது முற்றே கடையிரு சீரிணை
கடைமூன்று கூழை இடையிரண் டிடைபுணர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!
என தொல்காப்பியர் மோனைகளை வகை பிரித்துள்ளார் எனினும் தற்காலத்தில் பொழிப்பு மோனையைப் பயன்படுத்தி எழுதுவதையே பெருமையாக் கருதுகிறார்கள்.
முடியுமென்றால் அவ்வப்பொழுது ஏதேனும் ஓரடியில் முற்று மோனையும் செய்கிறார்கள். ஓரடியில் உள்ள நான்கு சீர்களிலும் முற்றுமோனை அமைப்பது என்பது அவ்வளவு எளிதன்று. கீழ்வரும் நாலடியார் பாடலைப்பாருங்கள் இரண்டாமடியின் அனைத்துச் சீர்களிலும் மோனை அமைந்திருப்பதை!
விருப்பில்லார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம் -- விருப்புடைத்
தன்போல்வர் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.
அவ்வப்போது கூழைமோனை அமைத்தும் பாடுவது உண்டு.
இவ்வளவில் செல்லுங்கொல் இவ்வளவில் காணுங்கொல்
இவ்வளவில் காதில் இயம்புங்கொல் -- இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று
ஆளுங்கொல் யானை அரசு.
இந்நளவெண்பாவை உற்று நோக்குக. இரண்டாமடியின் 1,3,4 ஆகிய சீர்களில் மோனை பொருந்தி வந்தமை.
இக்கிழமைக்கான ஈற்றடிக்கு ஆற்றல் படைத்தவர்கள் ஏதேனும் ஓர் வரியில் முற்று மோனையையோ அல்லது ஓரடியின் மூன்றுசீர்களிலேயோ மோனை அமைத்து எழுதுமாறு வேண்டுகிறேன்.
இக்கிழமைக்கான ஈற்றடி:- பண்பாய் தமிழில் படி!
அகரம்.அமுதா
Monday, August 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அணங்கின் அணியை அடுத்து அமைத்தால்
அணங்கும் அணியும் அழகு - அனைவரையும்
அன்பாய் அமுதா அழைக்கிறார் ஆய்ந்துநீ
பண்பாய்த் தமிழில் படி
பாவளர் பாவலரின் பண்ணிசைப் பாடலில்
ஆவலாய் அன்பாய் அருந்தமிழே -ஆவணமே
போலாம் பழகிடும் பைந்தமிழ்ப் பாட்டெல்லாம்
நூலாகப் பெற்றோம் நெகிழ்ந்து!
வணக்கம் முகவை! நன்று. இன்னும் பயிற்சி தேவை.
வாழ்த்துகள் ஜீவா! பண்ணும் பொருளும் மகிழச்செய்கிறது. வாழ்த்துகள்.
வணக்கம் முகவை! நன்று. இன்னும் பயிற்சி தேவை.
வாழ்த்துகள் ஜீவா! பண்ணும் பொருளும் மகிழச்செய்கிறது. வாழ்த்துகள்.
தாய்மொழி தன்னில் பயின்றாலே பாடம்
தெளிவாய் விளங்கிடுமே பட்டம்பல பெற்றிடவே
தண்மையாய் நானும் உரைக்கும் பொழுதேநீ
பண்பாய் தமிழில் படி
ஒசையும் சுவையும் எனக்கே திருப்தியாக இல்லை. யாப்பாவது சரியாக இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்களேன்!
வெண்பா பதிவுகள் பெரும்பாலும் பின்னூட்டங்கள் சார்ந்தவை என்பதால் பின்னூட்டங்கள் அதே பக்கத்தில் தெரியுமாறு மாற்றி அமைத்தால் எளிதாகவும் சிறப்பகவும் இருக்குமே!!
நன்றி.
வருக உயர்திரு சாணக்கியன் அவர்களே! வெண்பா செம்பொருள் சேர்ப்பதாக இருக்கிறது. வெண்பாவில் பொதுவாக ஏகாரம் வருவதுபோல் எழுதுவது நன்றாக இருக்காது.
பயின்றாலே, விளங்கிடுமே, பொழுதேநீ என பலஇடங்களில் ஏகாரம் வந்துள்ளது . அதைத்தவிர்த்திருந்தால் வெண்பா இன்னோசையுடையதாக இருந்திருக்கும்.
தங்களின் கருத்தை ஜீவ்ஸ்ஸிடம் தெரிவித்துள்ளேன். நிச்சயம் சரிசெய்வார். வாழ்த்துகள்.
இப்னு சாணக்கியன் அவர்களைத் தொடர்ந்து நானும் என் சார்பாக வெண்பாக்களை இடுகிறேன்.
சிலேடை வெண்பாக்கள்!
பானையும், பலகாரமும்!
தட்டித் தழலிடலால்; ஆவென்னும் வாயுளதால்;
சுட்டிடப்பொன் வண்ணமாய் தோன்றுதலால்; -அட்டியின்றி
மண்பானை வாசப் பலகாரம் நேராக்கிப்
பண்பாய் தமிழில் படி!
பனியாரமும், புத்தகமும்!
புரட்டுதலால்; பல்சுவை காணுதலால்; போய்ஓர்
திறண்டநூல கத்துள் சேர்ந்தும் -இருத்தலால்;
உண்ணும் பனியாரம் புத்தகத்தை ஒக்குமெனப்
பண்பாய் தமிழில் படி!
விண்ணும், கிணறும்!
சந்திர சூரியர் தோன்றுதலால்; தண்ணீரைத்
தந்தேநம் தாகம் தணித்தலால்; -சிந்தித்தே
விண்ணும்நீர் ஊற்றுக் கிணறும்நேர் என்றாய்ந்தே
பண்பாய் தமிழில் படி!
அகரம்.அமுதா
GOOD JOB..
///// Anonymous said...
GOOD JOB../////
thank you
கண்ணில் கருணையும்
விண்ணில் திகழ்ந்திடும் விண்மீனாய் மின்னியே
அன்பென்(ற) அமுதமாய் நெஞ்சில் திகழ
பண்பாய்த் தமிழில் படி
இதை எப்படி ஆரம்பிக்க்றது தெரியல. அர்த்தமுள்ள வெண்பாவா மாத்தி தாங்க ஐயா
செந்தமிழால் செந்தமிழா செம்மைபெற
பண்பாய் தமிழில் படி
//////கண்ணில் கருணையும்
விண்ணில் திகழ்ந்திடும் விண்மீனாய் மின்னியே
அன்பென்(ற) அமுதமாய் நெஞ்சில் திகழ
பண்பாய்த் தமிழில் படி
இதை எப்படி ஆரம்பிக்க்றது தெரியல. அர்த்தமுள்ள வெண்பாவா மாத்தி தாங்க ஐயா///////
Anonymous கோர் வேண்டுகோள். பின்னூட்டிடுகையில் பெயரையும் சேர்த்தெழுதுங்கள்.
திருத்தப்பட்ட வெண்பா:-
கண்ணில் கருணை கருத்தினிலே நேர்மையென
விண்ணில் திகழ்வெண் நிலாச்சொறியும் -தண்ணொளிபோல்
பண்பெல்லாம் பெற்றேயிப் பாரில் சிறப்படையப்
பண்பாய் தமிழில் படி!
அகரம்.அமுதா
/////செந்தமிழால் செந்தமிழா செம்மைபெற
பண்பாய் தமிழில் படி//////
அதே அனானி! கொஞ்சம் நன்றாகக் கவனித்தெழுதுங்கள். முதலடியில் நான்குசீர்கள் இருக்கவேண்டும். மூன்றுதான் இருக்கிறது.
Post a Comment