izmanam.com -->

Tuesday, September 09, 2008

ஈற்றடி இந்தா எழுது!

மன்னிக்க வேண்டும் நண்பர்களே! ஓரிரு கிழமைகளாக (வாரங்களாக) எனக்கு அம்மை போட்டிருந்ததால் பதிவைத் தொடர முடியவில்லை. இதோ இக்கிழமைக்கான ஈற்றடியை வழங்குகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "ஈற்றடி இந்தா எழுது!"

குறிப்பு:-இடுத்தடுத்த கிழமைகளில் (வாரங்களில்) ஈற்றடி வழங்க ஜீவ்ஸ் இலவசக்கொத்தனார் வாஞ்சிநாதன் செல்விசங்கர் இப்னுஹம்துன் ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.

அகரம்.அமுதா

7 comments:

said...

நற்றமிழில் பாட்டெழுத நாட்டமுற்றோர் வந்துதம்
கற்றறிவால் வெண்பாவில் காப்பிட்டுப் பற்றாளர்
போற்றிடத்தான் நல்லமுதன் ஊக்க(ம்) உறத்தந்தார்
ஈற்றடி. இந்தா எழுது!

said...

அருமை.அருமை முகவை மைந்தன் அவர்களே! வெண்பா முற்றெதுகையாக அமைந்து மிகச்சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.

என்பங்கிற்கு ஓர் வெண்பா:-

சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
ஏற்றடி என்பேனே என்தங்காய்! -ஆற்றடி
மாற்றடி ஏழை மனத்துயரை வெண்பாவின்
ஈற்றடி இந்தா எழுது!

said...

நல்ல தமிழில் நனிதேர்ந்து தாராயோ?

வல்ல தமிழறிந்த வண்டமிழா- சொல்லினிலே

ஏற்றதிலா "இந்தா"ச்சொல் ஏன்தந்தாய்?

வாநீயே

ஈற்றடி "இந்தா" எழுது.

said...

மாசுற்ற பூமி மகிழ்வற்ற வாழ்விங்கே
காசுமட்டும் போதுமென்று காண்பீரே - வீசும்இந்
நாற்றம் மறந்தே இருக்க உனக்கு
ஈற்றடி இந்தா எழுது

said...

வணக்கம் சிக்கிமுக்கியாரே! அருமை.வினாதொடுத்து மடக்கிவிட்டீர். இருப்பினும் கீழ்வரும் வெண்பாவைக் காண்க. விடைதெரிந்தால் (வெண்பாவில்) உரைக்கவும்.

இந்தா எனுஞ்சொல்லிங் ஏற்றதில்லை என்றுரைத்துத்
தந்தாரைச் சாடிவெண்பா சாற்றிவைத்தீர் -தந்தேனென்(று)
எற்றவோர் சொல்லிருக்க இந்தாவென் றேன்தந்தேன்?
ஈற்றடி இந்தா எழுது!

said...

வணக்கம் கொத்தனாரே! அருமை. அருமை. இருப்பினும் இலக்கணப்படி ஓரிரு பிழைகள் இருப்பதைக் காண்கிறேன். மூன்றாமடியின் இறுதிச்சீரும் நான்காமடியின் முதற்சீரும் புணர்ந்தால் தளைதட்டுகிறது. மற்றொன்று காண்பீரே! எனுஞ்சொல் பன்மை. ஆதலால் உனக்கு என ஒருமையில் வருவது பிழையாகும். உமக்கு எனவருதலே சரியாகும்.

said...

சிக்கி முக்கியாருக்கு வணக்கம். ஏன் 'இந்தா' என்ற பேச்சு வழக்குச் சொல்லை ஈற்றடியில் இணைத்தேன். இதோ பதில்:-

வழக்குச்சொல் கொண்டு வழங்குகவி வார்க்கும்
பழக்கம் பெருகிவரும் பண்பால் -தயக்கமின்றிச்
சாற்றிய ஈற்றடியில் 'இந்தா'வை ஏற்றினேன்;
ஈற்றடி இந்தா எழுது!

அகரம்.அமுதா